76 மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி
இந்த மாதம் 76 மருந்து நிறுவனங்கள் மீது கலப்படம் செய்ததற்காக அல்லது போலியான தயாரிப்புகளை விற்பனை செய்ததற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கலப்பட மருந்து நிறுவனங்களுக்கு எதிராக நடக்கும் இந்த நடவடிக்கை குறித்த தகவலை சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி செய்துள்ளார். ஆனால் எந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை. "மருந்துகளின் தரத்தில் கலப்படம் செய்யும் அனைத்து நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மாண்டவியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சில இந்திய மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் சில நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எந்தெந்த நிறுவனங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற தகவல் மட்டும் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்திய மருந்துகளால் உலக நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள்
சில நாட்களுக்கு முன், 18 மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது என்ற தகவல் வெளியானது. மேலும், 26 மருந்து நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, 76 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களாக இந்திய மருந்து நிறுவனங்கள் தயாரித்த கலப்பட மருந்துகளால் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டன. கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக இருந்த இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் நொய்டாவில் கைது செய்யப்பட்டனர். பிப்ரவரியில், சென்னையை சேர்ந்த மருந்து நிறுவனத்தின் கண் சொட்டு மருந்துகளால் அமெரிக்காவில் குறைந்தது 55 பேர் பாதிக்கப்பட்டனர், ஒருவர் உயிரிழந்தார்.