
18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
18 மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, உற்பத்தியை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 26 மருந்து நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று NDTV செய்தியில் கூறி இருக்கிறது.
இந்தியாவில் இருந்து போலியான மருந்துகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், மருந்து நிறுவனங்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தலைமையில் 76 மருந்து நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
மத்திய, மாநில குழுக்கள் மூலம் இந்த திடீர் ஆய்வு 20 மாநிலங்களில் நடத்தப்பட்டது. இந்த சோதனைகள் 15 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தியா
இந்திய மருந்துகளால் உலக நாடுகளில் ஏற்பட்ட பாதிப்புகள்
கடந்த சில மாதங்களாக இந்திய மருந்து நிறுவனங்கள் தயாரித்த மருந்துகளால் பல்வேறு நாடுகளில் இறப்புகள் ஏற்பட்டன.
கடந்த மாதம், குஜராத்தைச் சேர்ந்த மருந்து நிறுவனமான சைடஸ் லைஃப் சயின்சஸ், கீல்வாதத்திற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 55,000க்கும் மேற்பட்ட பொதுவான மருந்து பாட்டில்களை அமெரிக்க சந்தையில் இருந்து திரும்பப் பெற்றது. சுத்தமின்மையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக இருந்த இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் நொய்டாவில் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது கலப்பட மருந்து தயாரித்து விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
பிப்ரவரியில், சென்னையை சேர்ந்த மருந்து நிறுவனத்தின் கண் சொட்டு மருந்துகளால் அமெரிக்காவில் குறைந்தது 55 பேர் பாதிக்கப்பட்டனர், ஒருவர் உயிரிழந்தார்.