மஹாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர் ரவி உப்பல் துபாயில் கைது
மஹாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியின் இரண்டு முக்கிய உரிமையாளர்களில் ஒருவரான ரவி உப்பல், ED-இன் உத்தரவின் பேரில், இன்டர்போல் வழங்கிய ரெட் நோட்டீஸ் அடிப்படையில், உள்ளூர் காவல்துறையினரால் துபாயில் கைது செய்து, காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அமலாக்கத்துறையினரால் கடந்த மாதம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், மஹாதேவ் செயலி "சீட்டாட்டம், கிரிக்கெட், பேட்மிண்டன் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் சட்டவிரோத சூதாட்ட வசதிகளை வழங்குகிறது" என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை, இன்டர்போலிடம் விடுத்த கோரிக்கை அடிப்படையில், ரவி உப்பல், கடந்த வாரம் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக அமலாக்க இயக்குநரகம் (ED) அதிகாரிகள் துபாய் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோத பணபரிமாற்றத்தில் தேடப்படும் செயலியின் உரிமையாளர்கள்
சத்தீஸ்கரின் ராய்பூரில் உள்ள சிறப்புப் பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) நீதிமன்றத்தில் ரவி உப்பல் மற்றும் இந்த செயலியின் மற்றொரு பங்குதாரரான சௌரப் சந்திரகர் ஆகியோருக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு, கடந்த அக்டோபர் மாதம் பணமோசடி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. கைது செய்யப்பட்டுள்ள ரவி உப்பல், இந்திய குடியுரிமையை கைவிடாத நிலையில், பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாடு என்ற தீவிற்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தாக செய்திகள் கூறுகிறது. மஹாதேவ் சூதாட்ட செயலி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தனது தலைமை அலுவலகத்தை அமைத்து செயல்படுகிறது. இதன் உரிமையாளர்கள் பெரிய அளவிலான ஹவாலா நடவடிக்கைகள், பந்தயம் கட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஆஃப்ஷோர் கணக்குகளுக்குப் பயன்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.