வாட்டி வதைத்த வெயில்; நாட்டிலேயே மதுரையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமானதை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருப்பதால், இன்னும் சில தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கட்கிழமை (செப்டம்பர் 16) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரப்பதமான காற்று மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக, மாநிலத்தில் ஒருசில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் மேலும் தனது அறிக்கையில், வறண்ட வானிலை காரணமாக அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை பதிவுகள்
தமிழகத்தில் உள்ள வானிலை நிலையங்களில் 13 இடங்களில் திங்கட்கிழமை வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. மதுரையில் அதிகபட்சமாக 104.54 டிகிரி ஃபாரன்ஹீட் (40.3 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது திங்கட்கிழமை நாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 101.12 டிகிரி ஃபாரன்ஹீட் (38.4 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையும், நுங்கம்பாக்கத்தில் 98.78 டிகிரி ஃபாரன்ஹீட் (37.1 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இதற்கிடையே, கரூர், தஞ்சாவூர் மற்றும் பரங்கிப்பேட்டை வானிலை நிலையங்களைத் தவிர, மற்ற அனைத்து நிலையங்களிலும் திங்கட்கிழமை இயல்பை விட அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.