மதுரை மெட்ரோ ரயில் திட்டம் - வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை துவங்கியது
சென்னையை தொடர்ந்து மதுரையிலும் மெட்ரோ ரயில்கள் திட்டங்களுக்கான பணிகள் வேகமாக செய்யப்பட்டு வருகிறது. அதன்படி வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை செய்யும் பணியானது இன்று(மே.,10) துவங்கியுள்ளது. மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலான 31கிமீ., தொலைவிற்கு 18 நிலையங்கள் கொண்ட மெட்ரோ ரயில் சேவை செயல்படுவதற்கான பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. வைகை ஆற்றில் இருந்து வசந்தம் நகர் வரை 5 கிமீ., வரை பூமிக்கு அடியில் சுரங்கபாதையாகவும், 26 கிமீ., தொலைவிற்கு மேம்பாலங்களும் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
66 இடங்களில் மண் பரிசோதனை
இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையினை ஆர்.வி.அசோசியேட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்று கூறப்படுகிறது. மேலும் மதுரை ரயில்வே திட்டத்திற்கான நடப்பு நிதிநிலை அறிக்கையில் ரூ.8,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக 66 இடங்களில் மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வைகை ஆற்றின் கீழ் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் செல்லவுள்ளது. இதன் காரணமாகவே அங்கு மண் பரிசோதனை செய்யப்படுகிறது. கிடைக்கப்பெற்ற பாறை கற்களை கொண்டு ஆய்வகத்தில் பல்வேறு வகையான சோதனைகள் செய்யப்படுகிறது. இந்த சோதனைக்காக 100 அடிக்கும் கீழே வரை பாறைகள் சேகரிக்கப்பட்டது. இதற்கான விரிவானத்திட்ட அறிக்கையினை ஜூன் மாதத்திற்குள் முடித்து அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதேபோல் அடுத்தாண்டு ரயில் பணிகளை துவங்கி 2027க்குள் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.