டாஸ்மாக் விற்பனை நேரம் குறைப்பு: மதுரை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை
தமிழக மக்கள் நலம் கருதி டாஸ்மாக் மதுபான கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்கவும், 21வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மது விற்பனை தடை விதிக்கவும், திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை கே.கே. ரமேஷ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்கள். இந்த மனுவை விசாரித்த மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயண பிரசாத் மற்றும் மகாதேவன் ஆகியோர், அரசின் கொள்கை முடிவில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை என்று கூறினர். எனினும், பொது நலம் கருதி டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை குறைக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளதோடு, 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்வதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.
மது வாங்க, விற்க, உபயோகப்படுத்த தக்க உரிமம் இருக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் அதிரடி
மேலும் மது விற்பனை விலைப்பட்டியல் மற்றும் அதன் தீமைகள் குறித்து முழுவதும் தமிழில் அச்சிட்டிருக்க வேண்டும் என்றும், மது வாங்க, விற்க, உபயோகப்படுத்த உரிய உரிமம் உள்ளவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, மது பாட்டிலில் உள்ள லேபிளில் மதுவின் விலைப்பட்டியல் மற்றும் தயாரிப்பு குறித்து குறைக்கூற முகவரி, தொடர்பு விவரங்கள் முதலியன அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரைத்துள்ளபடி, தமிழக அரசு மது விற்பனை நேரத்தை மாற்றியமைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.