மதுரை: கோஷம் விண்ணை பிளக்க பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
செய்தி முன்னோட்டம்
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், இன்று (மே 1, 2026) அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றது. "கோவிந்தா... கோவிந்தா..." என்ற பக்தர்களின் முழக்கம் விண்ணைப் பிளக்க, தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கிய காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய 2026-ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் சிறப்பாக நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து, அழகர் மலையிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருளினார்.
அழகர்
வைகை ஆற்றில் பச்சை பட்டுடன் அழகர்
இயற்கை செழிக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் விதமாக, இன்று அதிகாலை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்ட அழகர், பச்சை பட்டு உடுத்தி சரியாக காலை 6 மணியளவில் வைகை ஆற்றில் இறங்கினார். ஆற்றின் இருபுறமும் குவிந்திருந்த லட்சக்கணக்கான மக்கள் அழகரைத் தரிசனம் செய்தனர். காலை 7:25 மணி வரை ஆற்றில் பக்தர்களுக்குக் காட்சி தந்த அழகர், பின்னர் ராமராயர் மண்டபம் நோக்கிப் புறப்பட்டார். லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடியதால், மதுரை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வைகை ஆற்றில், பக்தர்கள் பாதுகாப்பாகத் தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்வுகள்
அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகள்
இன்று தொடங்கி மே 4-ஆம் தேதி வரை கள்ளழகர் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு நடைபெறவுள்ளன: மே 1 (இன்று): பகல் 12 மணி: ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி (பக்தர்கள் அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நிகழ்வு). இரவு 9 மணி: வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் எழுந்தருளல். மே 2 (நாளை): மதியம்: தேனூர் மண்டபத்தில் மண்டுக முனிவருக்குச் சாப விமோசனம் அளித்தல். நள்ளிரவு 12 மணி: ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய நடைபெறும் புகழ்பெற்ற தசாவதாரக் காட்சி மே 3: காலை: மோகினி அவதாரத்தில் வீதி உலா. மே 4: அதிகாலை: பூப்பல்லக்கில் எழுந்தருளி அழகர்மலைக்குத் திரும்புதல்.