பக்தர்களின் 'கோவிந்தா' கோஷத்துடன் மதுரை அழகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
மதுரையில் பிரசித்தி பெற்ற மதுரை அழகர் கோவிலின் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் விண்ணை பிளக்க இந்த கும்பாபிஷேக வைபவம் நடைபெற்றது. 108 வைணவ ஸ்தலங்களில் முக்கியமான இடமான இந்த கள்ளழகர் கோவில், வருடந்தோறும் நடைபெறும் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு பெயர்பெற்றது. இங்கு எழுந்தருளியுள்ள சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடமிட்டு, தன்னுடைய தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்திற்கு மதுரைக்கு வருகை தருவது வழக்கம். மதுரையை ஆண்ட பாண்டியர்களாலும், பிற்பாடு நாயக்கர்களாலும் கட்டி, பராமரிக்கப்பட்ட இந்த காட்டுக்கோவிலின் ராஜகோபுரத்தின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. மதுரை அழகர் கோவில் கும்பாபிஷேக பணிகளுக்காக 1.5 கோடி செலவானதாக கூறப்படுகிறது. கும்பாபிஷேகத்திற்கு மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.