அதிமுக 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லுபடியாகும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
செய்தி முன்னோட்டம்
அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவை தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஏற்றுக் கொண்டது முற்றிலும் செல்லுபடியாகும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பை வாசித்தது. "6 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதில் எந்தவித விதிமீறலும் இல்லை. தன் விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்த உறுப்பினரின் முடிவைச் சபாநாயகர் ஏற்றுக் கொண்டது சட்டப்படி சரியானது" என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தீர்ப்பு
அதிமுக கொறடா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சபாநாயகரிடம் நிலுவையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க மனுக்கள் மீது 2 மாதங்களுக்குள் சபாநாயகர் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளனர்.
பின்னணி
வழக்கின் பின்னணியும் நீதிமன்ற வாதங்களும்
முன்னதாக, அதிமுக சட்டமன்ற கொறடாவின் உத்தரவை எதிர்த்து தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தது.
இந்நிலையில், அவர்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து, அதில் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் முறையே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக சார்பில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.க்களாகத் தேர்வாகினர்.
தகுதிநீக்க மனுக்கள் நிலுவையில் இருக்கும்போது ராஜினாமாவை ஏற்றது தவறு என அதிமுக தரப்பில் வாதிடப்பட்ட போதிலும், "சுய விருப்பத்தின் பேரில் அளிக்கப்பட்ட ராஜினாமாவை மறுக்க முடியாது" என்ற சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளரின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.