தமிழகத்தின் 5 தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வழக்குகளின் விசாரணை நிறைவடையும் வரை இடைத்தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படாது என இந்தியத் தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிப்பாணை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
பின்னணி
பொதுநல மனு மற்றும் வழக்கின் பின்னணி
திருநெல்வேலியை சேர்ந்த கே.வெங்கடாசலபதி தாக்கல் செய்த பொதுநல மனுவில், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் சூழலில் இடைத்தேர்தல் நடத்துவது மக்கள் பண வீணடிப்புக்கும், சட்ட சிக்கல்களுக்கும் வழிவகுக்கும் என வாதிடப்பட்டது.
தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி காலிப்பணியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றாலும், தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளபோது உடனடியாக இடைத்தேர்தல் நடத்த ஆணையம் கடமைப்படவில்லை".
"உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளின்படி, தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அப்பகுதி முழுமையான காலிப்பணியிடமாகக் கருதப்பட மாட்டாது. எனவே, தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை இந்த ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை" எனக்கூறியது.