கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகார் வழக்கு: யாரையும் காப்பாற்ற நினைக்காதீர்கள் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் விவகாரத்தில், தமிழக அரசின் செயல்பாடுகளை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாகச் சாடியுள்ளது. கடந்த ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்ட தகவல் நீதிமன்றத்தில் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசு முயற்சிப்பதாகத் தெரிந்தால் அது அரசுக்கே பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என நீதிபதி வி. லட்சுமிநாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்றக் கேள்விகள்
ஜூலை மாதப் புகாரும் அரசின் தாமதமும் குறித்த நீதிமன்றக் கேள்விகள்
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, TVK எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆனால், நீதிமன்றத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் விசாரித்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த ஜூலை 31-ஆம் தேதியே தமிழக தலைமைச் செயலாளரிடம் இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி, ஜூலை மாதமே அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகும் ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
தலைமைச் செயலாளராக இருந்தாலும் சரி, தூய்மைப் பணியாளராக இருந்தாலும் சரி, பணியிடங்களில் அனைத்துப் பெண்களுக்கும் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என நீதிபதி திட்டவட்டமாகக் கூறினார்.
விசாரணைக்கும் உத்தரவு
உள் புகார் குழு அமைக்கவும் உயர் அதிகாரி விசாரணைக்கும் உத்தரவு
பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013-ன் கீழ், இந்த விவகாரத்தை விசாரிக்க உடனடியாக உள் புகார் குழுவை அமைக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவில் ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமின்றி வெளிநபர்களும் இடம்பெற வேண்டும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆட்சியர் அளித்த புகாரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதால், கள்ளக்குறிச்சி எஸ்.பி இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.
அவருக்குப் பதிலாக ஐஜி அல்லது டிஐஜி அந்தஸ்திலான உயர் காவல்துறை அதிகாரி இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
கண்டனம்
சமூக வலைதளங்களில் அடையாளம் வெளியானதற்குக் கடும் கண்டனம்
புகார் அளித்த பெண் அதிகாரியின் அடையாளத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த போதிலும், சமூக வலைதளங்களில் அவரது விவரங்கள் பகிரப்பட்டதற்கு நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார்.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை எனத் தமிழக அரசு அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சைபர் கிரைம் பிரிவு ஏன் முன்கூட்டியே செயல்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
பாதிப்பு ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதால் என்ன பயன் என்றும் அவர் வினவினார்.
ஒத்திவைப்பு
நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட விசாரணை
இதற்கிடையில், இந்த வழக்கில் தன்னை ஒரு வாதியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் தரப்பில் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசு யாரையும் காப்பாற்ற விரும்பவில்லை எனக் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்ட நிலையில், உள் புகார் குழு அமைத்தது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
நீதிமன்றத்தின் இந்தக் கடுமையான உத்தரவுகளும், ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகார் அளிக்கப்பட்ட தகவல் வெளியாகியிருப்பதும் தமிழக அரசியலிலும் அதிகாரிகள் மட்டத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.