மின்வழி தடங்களை மாற்றும் செலவை பொதுமக்களிடம் வசூலிக்கக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்
பொது மக்களின் நிலத்தின் வழியாக செல்லும் தனியார் நிறுவனங்கள் நிறுவிய உயரமின்னழுத்த கேபிள்களை மாற்றியமைக்க, பொது மக்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புறம்போக்கு நிலம் பக்கத்தில் இருந்தும் கூட, தங்கள் நிலம் வழியாக தனியார் நிறுவனங்கள் மின்கோபுர வழித்தடங்களை அமைத்துள்ளதாக நில உரிமையாளர்கள் தொடுத்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனியார் நிலத்தின் வழியாக மின் கேபிள்கள் அமைக்கப்பட்ட பொது ஆட்சேபம் தெரிவித்ததையும் மீறி உயரமின்னழுத்த கேபிள்கள் நிறுவப்பட்டுள்ளன எனவும், அவற்றை அகற்ற வேண்டுமென்றால் நிறுவனத்திற்கு 81.11 லட்சம் ரூபாய் செலுத்தும்படி கேட்கப்பட்டது எனவும் கூறப்பட்டது.
உயர் நீதிமன்ற தீர்ப்பு
இரு பக்கத்தின் வாதத்தை கேட்ட நீதிபதி, "தனியார் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்க, மின்கோபுர வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது பொதுநோக்கத்துக்காக கிடையாது, தனியார் நிறுவனங்களின் நலனுக்காக மட்டுமே. இந்த வழித்தடங்கள் அமைக்கப்படும்போது, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாமல் பார்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது" என்றார். அதோடு, பொதுமக்களுக்கு சேவை ஆற்றுவதே, அரசு அதிகாரிகளின் கடமையே தவிர, தனியார் நிறுவனங்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுவது கிடையாது. மாற்றுப்பாதை இருக்கும்போது, மனுதாரர்களின் நிலம் வழியாக அமைத்திருக்கிறார்கள். கோர்ட் இதனை ஏற்காது' என்றார். "மனுதாரர்கள் உள்ளிட்ட தனிநபர்களின் நிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், மின்கோபுர வழித்தடங்களை மாற்றி அமைக்க வேண்டும். தனிநபர்கள் மீது செலவு தொகையை சுமத்தக்கூடாது. இன்னும் 8 வாரங்களுக்குள் இந்த நடவடிக்கையை முடிக்கவேண்டும்" என்று உத்தரவிடப்பட்டது.