109 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசு வாங்கிய கடன்! வட்டியுடன் திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
செய்தி முன்னோட்டம்
முதல் உலக போரின்போது பிரிட்டிஷ் அரசுக்கு தனது தாத்தா வழங்கிய ரூ.35,000 கடனை, வட்டியுடன் திரும்ப பெற பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்ப விவேக் ருதியா என்ற மத்திய பிரதேச தொழிலதிபர் தயாராகி வருகிறார். மறைந்த தொழிலதிபர் சேத் ஜும்மா லால் ருதியா, 1917-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி, 'இந்தியப் போர் கடன்' நிதிக்காக ரூ. 35,000 வழங்கியுள்ளார். போர்க்காலத்தில் நிதி நெருக்கடியில் இருந்த பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு உதவியதற்காக, அப்போதைய போபால் அரசியல் ஏஜென்ட் டபிள்யூ.எஸ். டேவிஸ் (W.S. Davis) கையெழுத்திட்ட அசல் ஆவணம் இக்குடும்பத்தாரிடம் உள்ளது.
ஆவணம்
ஆவணத்தின் கண்டுபிடிப்பு
விவேக் ருதியாவின் தந்தை சமீபத்தில் காலமானதைத் தொடர்ந்து, பழைய குடும்ப கோப்புகளை ஆய்வு செய்தபோது இந்த வரலாற்று ஆவணம் கண்டறியப்பட்டது. 1917-இல் வழங்கப்பட்ட இந்தத் தொகைக்கு 5.5% வட்டி வழங்கப்படும் என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது. "இது வெறும் பணத்தைப் பற்றியது மட்டுமல்ல, இது நீதியைப் பற்றியது" என்று விவேக் ருதியா தெரிவித்துள்ளார். 100 ஆண்டுகளுக்கும் மேலான கூட்டு வட்டி, பணவீக்கம் அல்லது தற்போதைய தங்கத்தின் மதிப்போடு ஒப்பிட்டு பார்த்தால், அந்த ரூ. 35,000 இன்று பல கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும் என்று அவர் கூறுகிறார்.
சிக்கல்
சட்டச் சிக்கல்கள்
சுதந்திரத்திற்கு முந்தைய கால கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் காலனித்துவ அரசாங்கத்துடனான ஒப்பந்தங்கள் மிகவும் சிக்கலானவை என சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். இருப்பினும், தற்போதைய ஐக்கிய இராச்சிய (UK) அரசாங்கத்திடம் இருந்து இந்த கடனை வசூலிக்க முடியுமா என்பது குறித்து விவேக் ருதியா தனது வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மறைக்கப்பட்டிருந்த இந்தத் தகவல், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது இந்திய மற்றும் பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.