டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மக்களவையில் இன்று(ஆகஸ்ட்-7), டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா-2023 குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தரவைப் பாதுகாப்பதற்கான தனிப்பட்ட உரிமைகளையும், அதைத் தகுந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கான சட்டப்பூர்வ தேவையையும் இது சமநிலைப்படுத்தும். ஜூலை 5அன்று மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மசோதா, குடிமக்களின் தனிப்பட்ட தரவுகள் சரிபார்க்கப்படாமல் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டிலும், தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நாடாளுமன்றக் குழு அந்த மசோதாவில் 81 திருத்தங்களை பரிந்துரைத்ததால், அப்போது மத்திய அரசு அந்த மசோதாவை திரும்பப் பெற்றது.
'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி': எதிர்க்கட்சிகள்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்(RTI) ஒரு திருத்தத்தையும் இந்த மசோதா முன்மொழிகிறது. அதனால், இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டால், எல்லை தாண்டிய தரவு பரிமாற்றங்களை கட்டுப்படுத்துவது, தரவு கொள்கையை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது போன்றவை எளிதாகும். மேலும், ஆஃப்லைனில் சேகரிக்கப்பட்ட தரவு மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தரவு உட்பட அனைத்து தனிப்பட்ட தரவுகளை கையாளுவதையும் இந்த சட்டம் ஒழுங்குபடுத்தும். இது குறித்து கவலை தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சிகள், இந்த மசோதா குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற குழுவுக்கு இதை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மசோதா மக்களின் தனியுரிமையை மீறுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.