LOADING...
தொகுதி வரையறை தமிழகத்திற்கு லாபமா? நஷ்டமா?: அமித் ஷாவின் விளக்கமும் தற்போதைய கள நிலவரமும்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மசோதாவை "வரலாற்று அநீதி" என்று விமர்சித்துள்ளார்

தொகுதி வரையறை தமிழகத்திற்கு லாபமா? நஷ்டமா?: அமித் ஷாவின் விளக்கமும் தற்போதைய கள நிலவரமும்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 17, 2026
11:25 am

செய்தி முன்னோட்டம்

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மூன்று முக்கிய மசோதாக்கள் மீது இன்று மாலை 4 மணிக்கு மக்களவையில் இறுதி கட்ட வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த மாற்றங்களால் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் அரசியல் அதிகாரம் பறிபோகும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்பது ஒரு "தவறான புரிதல்" என்று அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். லோக்சபா இடங்களின் எண்ணிக்கையை 543-லிருந்து சுமார் 816 முதல் 850 வரை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் சீரான முறையில் இடங்கள் அதிகரிக்கப்படும், இதன் மூலம் எந்தவொரு மாநிலத்தின் இடமும் குறையாது, மாறாக அதிகரிக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

உயர்வு

தமிழகத்தின் நிலை: 39-லிருந்து 59 ஆக உயர்வு

மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தேசப் பட்டியலின்படி, தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும். தமிழக இடங்கள்: 39 (7.18%)-லில் இருந்து 59 (7.23%) ஆக உயரும். தென்மாநிலங்கள் (மொத்தம்): 129 (23.76%)-லில் இருந்து 195 (23.87%) ஆக உயரும். மத்திய அரசின் வாதப்படி, மொத்த இடங்கள் கூடினாலும், நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களின் ஒட்டுமொத்தப் பங்கு 24% என்ற அளவில் நிலையாகவே இருக்கும்.

எதிர்ப்பு

தொகுதி மறுவரைக்கு எதிர்ப்பு ஏன்?

தமிழகத்தின் இடங்கள் 59 ஆக அதிகரித்தாலும், வடமாநிலங்களில் குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இடங்கள் இன்னும் பிரம்மாண்டமாக உயரும். வடமாநிலங்களின் இடங்கள் பாதிக்கு மேல் அதிகரிக்கும் போது, மத்தியில் ஆட்சி அமைக்க தென்மாநிலங்களின் ஆதரவு தேவையில்லை என்ற நிலை உருவாகலாம் என்பதே எதிர்க்கட்சிகளின் கவலை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மசோதாவை "வரலாற்று அநீதி" என்று விமர்சித்துள்ளார். மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காகத் தென்மாநிலங்களை தண்டிக்கும் செயல் இது எனக் கூறி மசோதாவின் நகலை எரித்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

Advertisement

வாக்கெடுப்பு

இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள 3 மசோதாக்கள்

131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா, 2026 தொகுதி மறுவரையறை மசோதா, 2026 யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா, 2026 இந்த மசோதாக்கள் சட்டமாக மாற இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆளும் தரப்பிற்கு அந்தப் பெரும்பான்மை கிடைக்குமா என்பதே இன்றைய மிகப்பெரிய கேள்வி.

Advertisement