அமெரிக்கா -ஈரான் ஒப்பந்தத்தின் முதல் வெற்றி: ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து குஜராத் வந்தடைந்தது இந்தியாவின் முதல் LNG கப்பல்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மூன்றரை மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த போரினால் முடக்கப்பட்டிருந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, பாதுகாப்பாக கடந்து இந்தியாவின் முதல் LNG கப்பல்-'திஷா' குஜராத்தின் தாகேஜ் துறைமுகத்தை வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்தது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த வாரம் எட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க 14 அம்ச அமைதி ஒப்பந்தத்திற்கு பிறகு, வளைகுடா கடற்பகுதியை கடந்து இந்தியாவை வந்தடைந்துள்ள முதல் LNG கப்பல் இதுவாகும்.
'திஷா'
குஜராத் துறைமுகத்தில் நங்கூரமிட்ட 'திஷா'
மால்டா நாட்டின் கொடியுடன் பயணிக்கும் 'திஷா' கப்பல், சுமார் 62,370 மெட்ரிக் டன் திரவ இயற்கை எரிவாயுவை ஏற்றிவந்துள்ளது. இக்கப்பலின் வருகை குறித்து குஜராத்தின் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், "எல்என்ஜிசி திஷா கப்பல் வெள்ளிக்கிழமை காலை தாகேஜ் துறைமுகத்தை வந்தடைந்தது. தற்போது அது 'பெட்ரோநெட் எல்என்ஜி' முனையத்தில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது" என்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் கூட்டமைப்பால் நிர்வகிக்கப்படும் இக்கப்பல், பெட்ரோநெட் நிறுவனத்திற்காக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இக்கப்பல் ஜூன் 15 அன்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த நிலையில், திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை காலை தாகேஜில் தரைதட்டியுள்ளது என்று மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் (MoPSW) இயக்குநர் ஓபேஷ் குமார் சர்மா தெரிவித்துள்ளார்.