அதானி பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கும் எல்ஐசி!
ஹிண்டர்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து நிலையிலாத் தன்மையுடனேயே இருக்கின்றன அதானி குழுமப் பங்குகள். மற்ற மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் அதானி குழுமத்தில் தங்களுடைய முதலீடுகளைக் குறைத்து வரும் நிலையில், எல்ஐசி நிறுவனம் மட்டும் மேலும் மேலும் முதலீடு செய்து வருகிறது. கடந்த மார்ச் 31-ல் நிறைவடைந்த நான்காம் காலாண்டில் அதானி குழுமத்தின் நான்கு பங்குகளில் முதலீடுகளை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது எல்ஐசி. அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி ட்ரான்ஸ்மிஷன் ஆகிய நான்கு பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கிறது.
எவ்வளவு முதலீட்டை அதிகரித்திருக்கிறது?
அதானி என்டர்பிரைசஸ் பங்குகளில் டிசம்பர் காலாண்டில் 4.23 சதவிகிதமாக இருந்த முதலீட்டை மார்ச் காலாண்டில் 4.26 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறது. அதானி கிரீன் எனர்ஜியில் 1.28 சதவிகிதமாக இருந்த முதலீட்டை 1.36 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறது. அதானி டோட்டல் கேஸில் 5.96 சதவிகிதத்தில் இருந்து 6.02 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறது. அதானி ட்ரான்ஸ்மிஷனில் டிசம்பர் காலாண்டில் 3.65 சதவிகிதத்தில் இருந்து மார்ச் காலாண்டில் 3.68 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறது எல்ஐசி. நான்கு பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருந்தாலும், அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகிய இரண்டு பங்குகளில் மட்டும் முதலீட்டை குறைத்திருக்கிறது எல்ஐசி.