RJD தலைவர் தேஜஸ்வி யாதவை விசாரணைக்கு அழைத்தது CBI
நில மோசடி வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம்(RJD) தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவை, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இன்று(மார் 11) விசாரணைக்கு அழைத்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்புவது இது இரண்டாவது முறையாகும். முதலாவது சம்மன் பிப்ரவரி 4 அன்று வெளியிடப்பட்டது என்று செய்தி நிறுவனமான ANI தெரிவித்துள்ளது. 2004-09 காலகட்டத்தில் நடைபெற்ற இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன்(IRCTC) நில மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம்(ED), பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதே வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவியிடம் சமீபத்தில் தான் சிபிஐ விசாரித்தது.
தேஜஸ்வி யாதவ் இன்னும் ஆஜராகவில்லை
தேஜஸ்வி யாதவ் மார்ச் 4 ஆம் தேதி அன்று விசாரணைக்கு சிபிஐயால் அழைக்கப்பட்டதாகவும் ஆனால் அவர் ஆஜராகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் விளைவாக, சிபிஐ புதிய தேதியை இன்று வெளியிட்டது. யாதவ் இன்று காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு ஆர்ஜேடி தலைவர் இன்னும் வரவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். வேலை வாய்ப்பு மோசடி தொடர்பாக தேசிய தலைநகரில் உள்ள பீகார் துணை முதல்வர் யாதவ் வீட்டில் நேற்று ED சோதனை நடத்தியது. யாதவ் வீட்டில் 11 மணிநேரம் நடைபெற்ற சோதனைக்கு பிறகு தான் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர் என்று ANI கூறியுள்ளது.