ஊழல் வழக்கு: லாலு பிரசாத்தின் ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்
பீகார்: நிலங்களை லஞ்சமாக தருபவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய ஊழல் வழக்கில், லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை மத்திய புலனாய்வு அமைப்பு இன்று(ஜூலை 31) பறிமுதல் செய்தது. லாலு யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகனும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு எதிராக ஒரு மோசடி வழக்கின் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லாலு யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோர் இதற்கு முன்பு பீகார் முதல்வர்களாக பணியாற்றியவர்கள் ஆவர். இந்நிலையில், நிதி மோசடி குற்றங்களை விசாரிக்கும் மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்க இயக்குனரகம் இன்று அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது.
லாலு பிரசாத் மற்றும் 15 பேருக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
2004 முதல் 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக பணியாற்றிய லாலு பிரசாத், வேலை வாய்ப்பு வழங்குவதற்கு நிலத்தை லஞ்சமாக வாங்கியதாக அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அமலாக்க இயக்குனரகத்தை தவிர சிபிஐயும் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. ஜூலை 3ஆம் தேதி, இந்த வழக்கில் சிபிஐ தனது இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தான் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2022ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி சிபிஐ, லாலு பிரசாத் மற்றும் 15 பேருக்கு எதிராக இந்த வழக்கை பதிவு செய்தது.