
லடாக் வன்முறைக்கு பாஜகவின் தவறான முடிவுகளும், வேலைவாய்ப்பு நெருக்கடியும் தான் கரணம்: சோனம் வாங்சுக்
செய்தி முன்னோட்டம்
லடாக்கில் நேற்று வெடித்த வன்முறை சம்பவங்களுக்கு, மத்திய பாஜக அரசின் தவறான முடிவுகளும், இளைஞர்களிடையே நிலவும் கடுமையான வேலைவாய்ப்பு நெருக்கடியுமே முக்கியக் காரணம் என்று பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் குற்றம் சாட்டியுள்ளார். வன்முறை வெடித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இது தனது வாழ்க்கையின் "மிகவும் சோகமான நாட்களில் ஒன்று" என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
வாக்குறுதி
'பாஜக வாக்குறுதிகளை மீறியது'
இந்த வன்முறை, லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்குவது மற்றும் இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் அதைச் சேர்ப்பது போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடு என்று வாங்சுக் கூறினார். "கடந்த ஐந்து ஆண்டுகளாக, மகாத்மா காந்தியின் வழியைப் பின்பற்றி நாங்கள் அமைதியான போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால், இன்று இளைஞர்கள் வெறித்தனமாகப் போராடியது எதிர்பாராதது, ஆனால் மிகவும் இயல்பானது" என்று கூறினார். லடாக் மக்களின் கோபத்திற்கு முக்கிய காரணம், 2020 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பாஜக அளித்த வாக்குறுதிகள் "யூ-டர்ன்" செய்யப்பட்டதே என்று வாங்சுக் சுட்டிக்காட்டினார். "அவர்கள் ஆறாவது அட்டவணையின் கீழ் லடாக் கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், அவர்கள் முற்றிலும் பின்வாங்கிவிட்டனர்," என்று அவர் குறிப்பிட்டார்.
வேலையின்மை
வேலையின்மை நெருக்கடி
வேலையின்மை நெருக்கடிதான் இளைஞர்களின் போராட்டத்திற்கு மற்றொரு முக்கிய உந்துதல் என்று வாங்சுக் தெரிவித்தார். "கடந்த ஐந்து ஆண்டுகளாக, குறிப்பாக உயர் மட்டங்களில், கிட்டத்தட்ட எந்த வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை. இது இளைஞர்களின் விரக்தியை மேலும் அதிகரித்தது," என்று அவர் கூறினார். மேலும், மத்திய அரசு பேச்சுவார்த்தைகளை தேவையில்லாமல் தாமதப்படுத்தியதும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சக ஆர்வலர்களின் உடல்நிலை மோசமடைந்ததும் இளைஞர்களின் கோபத்தைத் தூண்டியது என்றும் அவர் குறிப்பிட்டார். "இது அவர்களின் (இளைஞர்களின்) இரத்தத்தை கொதிக்க வைத்தது," என்று அவர் உணர்ச்சிவசப்பட்டார்.
இளைஞர்களின் வெளிப்பாடு
'அரசியல் சதி அல்ல, இளைஞர்களின் வெளிப்பாடு'
இந்த போராட்டங்கள் அரசியல் கட்சிகளால் தூண்டப்பட்டவை என்ற குற்றச்சாட்டுகளை வாங்சுக் முற்றிலும் நிராகரித்தார். "இது முற்றிலும், முற்றிலும் அரசியலற்றது," என்று அவர் வலியுறுத்தினார். "காங்கிரஸ் கட்சிக்கு 5,000 பேரை ஒன்று திரட்டும் அளவுக்கு செல்வாக்கு இல்லை. இது இளைஞர்களின் தன்னெழுச்சியான இயக்கம்," என்று அவர் கூறினார். அதே சமயம், தனது அகிம்சைப் போராட்ட அணுகுமுறையால் இளைஞர்கள் பொறுமை இழந்துவிட்டதையும் அவர் ஒப்புக்கொண்டார். "அவர்கள் என்னை எனது அமைதியான வழிக்காக குறை கூறுவார்கள். எனவே, இது ஏற்கனவே அதிகரித்து வருகிறது," என்று அவர் கூறினார்.
குற்றச்சாட்டு
மத்திய அரசின் குற்றச்சாட்டு
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வன்முறைக்கு சோனம் வாங்சுக்கின் "ஆத்திரமூட்டும் அறிக்கைகளே" காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது. அமைச்சகத்தின் செய்திக்குறிப்பின்படி, வாங்சுக்கின் பேச்சுகளால் தூண்டப்பட்ட ஒரு கும்பல், பாஜக அலுவலகம் மற்றும் தலைமை நிர்வாகக் குழு அலுவலகத்திற்கு தீ வைத்து, போலீஸ் வாகனங்களையும் எரித்துள்ளது. மேலும், உயர் அதிகாரக் குழுவுடனான (HPC) பேச்சுவார்த்தைகளை நாசப்படுத்த "அரசியல் ரீதியாக உந்துதல் பெற்ற நபர்கள்" முயற்சிப்பதாகவும் அரசு குற்றம் சாட்டியுள்ளது. அரசு, லடாக்கில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு, பெண்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற பல சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது ராகுல் காந்தி மற்றும் ஜார்ஜ் சோரோஸ் ஆகியோரால் திட்டமிடப்பட்ட ஒரு சதி என்றும் குற்றம் சாட்டியுள்ளது.