தோல்விக்குப் பின் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை: கொளத்தூர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சோதனை எப்படி என்ன நடக்கும்?
செய்தி முன்னோட்டம்
கடந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த மனுவின் அடிப்படையில், அங்கு பயன்படுத்தப்பட்ட 14 வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) மைக்ரோகண்ட்ரோலர் மற்றும் மெமரி சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. 2011 முதல் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த மு.க.ஸ்டாலின், 2026 தேர்தலில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகளில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் இயந்திரங்களின் துல்லியத்தன்மையை சரிபார்க்க விண்ணப்பிக்கலாம் என்ற விதியின் கீழ் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நடைமுறைகள்
சோதனையை மேற்கொள்ளும் பொறியாளர்கள் மற்றும் நடைமுறைகள்
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உற்பத்தி செய்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆகிய நிறுவனங்களின் பொறியாளர்களால் இந்த தொழில்நுட்ப பரிசோதனை நடத்தப்படுகிறது.
மாவட்ட தேர்தல் அதிகாரியின் நேரடி முன்னிலையிலும், முழு பாதுகாப்புடன் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டும் இந்த ஆய்வு நடைபெறுகிறது.
சோதனையின் போது மனுதாரரான மு.க.ஸ்டாலின் அல்லது அவரால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் நேரடியாக உடனிருந்து பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.
செய்முறை
மாதிரி வாக்குப்பதிவு மற்றும் தரவு உறுதி செய்யும் முறை
பரிசோதனையின் முதல் கட்டமாக, வாக்குப்பதிவு இயந்திரத்தின் பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட் மற்றும் விவிபாட் (VVPAT) சாதனங்கள் ஒன்றுடன் ஒன்று சரியாகத் தொடர்புகொள்கின்றனவா என்பது ஆய்வு செய்யப்படுகிறது.
பின்னர், ஒவ்வொரு இயந்திரத்திலும் 500 முதல் 1400 வாக்குகள் வரை மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும்.
மாதிரி வாக்குப்பதிவு முடிந்ததும், கன்ட்ரோல் யூனிட்டில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும், விவிபாட் இயந்திரத்தில் விழுந்த காகித வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையும் துல்லியமாக ஒத்துப் போகிறதா என்பது சரிபார்க்கப்படும்.
இச்சோதனையின் மூலம் இயந்திரத்தின் மெமரியில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது நிரூபிக்கப்படும்.
கட்டண விபரங்கள்
கட்டண விபரங்கள் மற்றும் முந்தைய சோதனைகளின் முடிவுகள்
ஒரு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்க ரூ.47,200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான செலவை கோரிக்கை விடுத்த வேட்பாளரே ஏற்க வேண்டும்.
கொளத்தூரில் 14 வாக்குச்சாவடிகளின் இயந்திரங்களை ஆய்வு செய்ய மு.க.ஸ்டாலின் தரப்பில் கட்டணம் செலுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இச்சோதனையில் முறைகேடுகள் ஏதும் இல்லை என்பது உறுதியானால், செலுத்தப்பட்ட கட்டணம் திரும்ப வழங்கப்படாது.
முன்னதாக 2024 மக்களவைத் தேர்தலின் போது வேலூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உட்பட நாடு முழுவதும் 11 வேட்பாளர்கள் இதேபோன்று விண்ணப்பித்து சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், அவற்றில் எந்தவொரு தொழில் நுட்ப முறைகேடும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.