கொச்சியில் பயங்கர கார் விபத்து; 3 பேரை பலி வாங்கிவிட்டு "எங்க அப்பா பாத்துப்பாரு" என எகிறிய 19 வயது வாலிபர்
செய்தி முன்னோட்டம்
கொச்சி சர்வதேச விமான நிலைய சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அதிவேகமாக வந்த மினி கூப்பர் சொகுசு கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் எர்ணாகுளத்தில் லாஜிஸ்டிக்ஸ் படிப்பை பயின்று கொண்டே த்ரிகாக்கராவில் பகுதிநேரப் பணி புரிந்து வந்த மாணவர்கள் ஆவர். இவர்கள் மூவரும் இரவு பணியை முடித்துவிட்டு உணவருந்திவிட்டுத் திரும்பியபோது, அதிகாலை 1:45 மணியளவில் பின்னால் இருந்து அதிவேகமாக வந்த கார் மோதி சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர்.
திமிர் பேச்சு
"எங்க அப்பா பாத்துப்பாரு": கைதான 19 வயது தொழிலதிபரின் மகன்
விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த 19 வயதான சுஹைல் சஜீவ் என்ற இளைஞரை பிடித்துப் பொதுமக்கள் சரமாரியாகக் கேள்வியெழுப்பினர்.
அப்போது அவர், "இது ஏர்போர்ட் ரோடு, வேகமா போறதுல என்ன தப்பு? எல்லாவற்றையும் எங்க அப்பா பாத்துப்பாரு" எனத் திமிராகப் பேசியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சுஹைல் சஜீவ், ஆடை நிறுவன அதிபரின் மகன் என்பதும், இன்ஸ்டாகிராமில் 200 கி.மீக்கும் அதிகமான வேகத்தில் கார் ஓட்டி ரீல்ஸ் பதிவிடும் பழக்கம் கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
நெடும்பாசேரி காவல்துறையினர் சுஹைல் சஜீவைக் கைது செய்து, கொலைக்கு நிகரான குற்றமற்ற மனிதக்கொலை பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.