Loading...
ரூ.1020 கோடி டெண்டர் முறைகேடு! கே.என்.நேரு மற்றும் 13 பேர் மீது பாய்ந்தது லஞ்ச ஒழிப்புத்துறை FIR
கே.என்.நேரு மற்றும் 13 பேர் மீது பாய்ந்தது லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்ஐஆர்

ரூ.1020 கோடி டெண்டர் முறைகேடு! கே.என்.நேரு மற்றும் 13 பேர் மீது பாய்ந்தது லஞ்ச ஒழிப்புத்துறை FIR

எழுதியவர் Sekar Chinnappan
Sep 07, 2026
03:15 pm

செய்தி முன்னோட்டம்

முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அண்மையில் அதிரடி சோதனைகளை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் சுமார் ரூ. 1,020 கோடி அளவிற்குப் பெருமளவு டெண்டர் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி கே.என்.நேரு உட்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை 14 சட்டப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

சோதனைகள்

19க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனைகள்

திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என். நேருவின் இல்லம் மற்றும் சென்னையில் உள்ள அடையாறு, அண்ணா நகர், மயிலாப்பூர், ஆரியபுரம், திருவான்மியூர் உள்ளிட்ட 19க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் அவரது சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் சான்றுகள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சம்

எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்

லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள எஃப்ஐஆர் அறிக்கையின்படி, ஒப்பந்த மதிப்பில் 7.5 முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சமாக பெறப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கே.என்.நேரு, அவரது சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன், உதவியாளர் கவிபிரசாத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம், எபினேசர் மற்றும் டிவிஎச் நிறுவனத்தின் ரமேஷ் உட்பட 13 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அடையாளம் தெரியாத சில அரசு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ஆதாரங்கள்

வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள்

இந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணையில், கே.என். நேருவின் உதவியாளர் கவிபிரசாத்தின் கைப்பேசியில் இருந்து மீட்கப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்கள் முக்கிய ஆதாரங்களாகச் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, ரூ. 1,020 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக எஃப்ஐஆர் நகல் வெளியாகியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT