ஜனவரி 2025இல் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சென்னைவாசிகள் எளிதாக அணுகும் வகையில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் இது நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. கோயம்பேட்டில் இயங்கி வந்த பேருந்து நிலையம் கிளம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டாலும், மக்கள் அந்த பேருந்து நிலையத்தை எளிதாக அணுக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும், ரயிலில் செல்லும் பயணிகள் ஊரப்பாக்கத்தில் இருந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதற்காக கிளம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசுடன் இணைந்து தெற்கு ரயில்வே நீண்ட தூரம் தெற்கு செல்லும் பேருந்துகளில் ஏறும் பயணிகளுக்காக கிளாம்பாக்கத்தில் நிறுத்த ரயில் நிலையம் அமைக்கும் திட்டத்தை வகுத்தது.
சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விளக்கம்
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மூலம், மாநில அரசு, 20 கோடி ரூபாயை, கிளாம்பாக்கத்தில் ஹால்ட் ஸ்டேஷன் கட்டுவதற்கு வழங்கியது. மேலும், சாலையின் எதிர்புறத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்க, சிஎம்டிஏ ₹79 கோடி செலவில் ஸ்கைவாக் அமைக்கவும் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, நிலம் கையகப்படுத்துதல் காரணமாக ரயில் நிலைய கட்டுமானப் பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், சில மாதங்களுக்கு முன் அது முடிக்கப்பட்டது என்றும், ரயில் நிலையத்திற்கு சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, பிளாட்பாரங்களில் மண் நிரப்பும் பணி துவங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஜனவரி 2025க்குள் கட்டிமுடிக்க திட்டம்
வண்டலூருக்கும் ஊரப்பாக்கத்துக்கும் இடையே நிறுத்தப்படும் ரயில் நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு விரைவாகவும் எளிதாகவும் செல்வதற்காக ஸ்கைவாக்குடன் ஒருங்கிணைக்கப்படும் என்று விஸ்வநாத் ஈர்யா கூறினார். பணியை செய்து வரும் சென்னை கோட்டத்தின் அசல் அட்டவணையின்படி, இந்த ஆண்டு டிசம்பருக்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் முடிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், ரயில் நிலையம், பிளாட்பார்ம்களின் முழு கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்பதால் ஒரு மாத தாமதமாக ஜனவரி 2025க்குள் கட்டி முடிக்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிறுத்தத்தில் மூன்று நடைமேடைகள் இருக்கும், புறநகர் ரயில்களுக்கு இரண்டு நடைமேடைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்களுக்கு ஒரு நடைமேடையும் இருக்கும்.