Page Loader
கர்நாடக பாஜகவின் புதிய நட்சத்திர பிரச்சாரகர்: யாரிந்த கிச்சா சுதீப்
சுதீப் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் அல்ல என்று பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்

கர்நாடக பாஜகவின் புதிய நட்சத்திர பிரச்சாரகர்: யாரிந்த கிச்சா சுதீப்

எழுதியவர் Sindhuja SM
Apr 05, 2023
04:14 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடக திரையுலகின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான கிச்சா சுதீப், மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளித்து பிரசாரம் செய்யப்போவதாக இன்று(ஏப் 5) அறிவித்துள்ளார். சுதீப் பாஜக கட்சியில் இணையப்போவதாக எழுந்த ஊகங்களை அவர் நிராகரித்துள்ளார். சுதீப், செப்டம்பர் 2, 1973 அன்று கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் பிறந்தார். 1997இல் 'தாயவ்வா' படத்தின் மூலம் அவர் நடிகராக அறிமுகமானார். அவர் தனது 'ஹுச்சா' (2001), 'நந்தி' (2002) மற்றும் 'சுவாதி முத்து' (2003) ஆகிய படங்களுக்காக தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சிறந்த நடிகருக்கான (கன்னடம்) பிலிம்பேர் விருதை வென்றார். பெங்களூரில் உள்ள தயானந்த சாகர் பொறியியல் கல்லூரியில் அவர் தொழில்துறை மற்றும் உற்பத்திப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.

கர்நாடகா

சுதீப் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் அல்ல: பசவராஜ் பொம்மை

"இக்கட்டான காலங்களில் பாஜக எனக்கு ஆதரவளித்தது. நான் இப்போது அவர்களுக்கு ஆதரவளிக்க போகிறேன். நான் பாஜகவுக்காக பிரச்சாரம் மட்டுமே செய்வேன், தேர்தலில் போட்டியிட மாட்டேன்" என்று கிச்சா சுதீப் செய்தியாளர்களிடம் இன்று கூறினார். மேலும், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், எந்தக் கட்சியில் பசவராஜ் பொம்மை இருந்தாலும், அவருக்கு ஆதரவளிபேன் என்று கூறினார். "மதிப்பிற்குரிய பொம்மை ஐயாவுக்கு எனது ஆதரவைத் தருகிறேன்" என்று கூறிய கிச்சா சுதீப், முதலமைச்சரை தனது 'மாமா' என்று குறிப்பிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய பொம்மை, "சுதீப் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. ஆனால், அவர் எனக்கு ஆதரவு அளித்தால் அது பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தான் அர்த்தம்" என்று கூறியுள்ளார்.