கேரளாவின் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: சுரங்கப்பாதை திட்டப் பகுதியில் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள்
செய்தி முன்னோட்டம்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கல்லாடியில் இன்று காலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இங்கு நடைபெற்று வரும் ஆனக்கம்போயில் - மேப்பாடி இரட்டைச் சுரங்கப்பாதைதிட்ட பகுதியில் உள்ள மீனாட்சி பாலம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு நூற்றுக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய முண்டக்கை நிலச்சரிவு பகுதிக்கு மிக அருகிலேயே இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் கனமழை காரணமாக சுரங்கப்பாதைக்காக தோண்டப்பட்ட மண் மற்றும் பாறை இடிபாடுகள் சரிந்து விழுந்ததில், அங்கு தங்கியிருந்த தொழிலாளர்கள் மற்றும் சில வாகனங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளன.
மீட்புப்பணி
5 பேர் காயம்; தீவிரமடையும் மீட்புப்பணி
கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA) வெளியிட்டுள்ள முதற்கட்ட தகவலின்படி, நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கிய 5 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. அவசரக்கால மீட்புக் குழுவினர் வருவதற்கு முன்பாகவே, உள்ளூர் மக்கள் 3 பேரை பத்திரமாக மீட்டனர். இப்பகுதியில் தொழிலாளர் குடியிருப்புகள் மட்டுமின்றி சில வீடுகளும், ஹோம்ஸ்டேக்களும் (Homestays) உள்ளதால், மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கல்பேட்டாவில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், மீனங்காடி மற்றும் கோழிக்கோட்டில் இருந்து 60-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Heartbreaking news from Kerala as heavy rains trigger a major landslide at the Anakkompoyil-Meppadi tunnel project site near Kalladi, Wayanad
— SaffronSoul (@TheRealDharm) July 7, 2026
Several workers & locals are feared trapped under the debris. Local residents have already rescued three people as NDRF & Fire Services…
குற்றச்சாட்டு
"இது இயற்கையான நிலச்சரிவு அல்ல; மனித தவறு": அமைச்சர் குற்றச்சாட்டு
கடந்த 24 மணி நேரத்தில் இப்பகுதியில் 265 மிமீ அளவுக்குப் பலத்த மழை பதிவாகியுள்ளதால், பாதுகாப்பு கருதி நேற்று முதலே சுரங்கப்பாதை பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்த விபத்து குறித்துப் பேசிய கேரள அமைச்சர் டி. சித்திக்,"இது இயற்கையாக நடந்த நிலச்சரிவு அல்ல, மனித தவறுகளால் ஏற்பட்ட செயற்கையான நிலச்சரிவு. கொங்கன் ரயில்வே நிறுவனத்திற்கு இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக எச்சரித்திருந்தார்". "ஆனால் அவர்கள் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் முண்டக்கையில் 298 பேர் பலியாகினர். இதுபோன்ற அலட்சியங்களை அரசு பொறுத்துக் கொள்ளாது" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
ஆலோசனை
முதல்வர் அவசர ஆலோசனை
வயநாடு நிலச்சரிவு விவகாரத்தை அடுத்து, கேரள முதலமைச்சர் வி.டி. சதீஷன் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, மீட்புப் பணிகளைப் போர்முனையில் முடுக்கிவிட உத்தரவிட்டுள்ளார். மேலும், வருவாய்த்துறை அமைச்சர் ஏ.பி. அனில் குமார் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் டி. சித்திக் ஆகியோரை உடனடியாக வயநாட்டிற்கு சென்று மீட்புப் பணிகளை நேரில் கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளார். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்பொழுது கனரக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இடிபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.