வாலிபத்தில் தேர்வு.. 61 வயதில் வந்த அரசு வேலைக்கான கடிதம்! கேரளாவில் சுவாரசிய சம்பவம்
செய்தி முன்னோட்டம்
கேரள அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (Kerala PSC) அதீத மந்தமான செயல்பாட்டிற்குச் சான்றாக, 61 வயது முதியவர் ஒருவருக்கு அவர் இளைஞராக இருந்தபோது எழுதிய தேர்வுக்கான அரசு வேலை நியமனக் கடிதம் தற்போது வந்து சேர்ந்துள்ள வினோத சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சமூக வலைத்தளங்களில் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் காளிகாவு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத் (61). இவர் தனது வாலிப காலத்தில் அரசு வேலைக்கு சேருவதையே தனது வாழ்நாளின் லட்சியமாக கொண்டு கடினமாக உழைத்து வந்தார்.
ரேங்க் லிஸ்ட்
2005-ல் தேர்வு; 2008-ல் காலாவதியான ரேங்க் லிஸ்ட்
கடந்த 2005-ஆம் ஆண்டு கேரள பிஎஸ்சி நடத்திய 'பகுதி நேர இளநிலை அரபு ஆசிரியர்' பணிக்கான போட்டித் தேர்வை அப்துல் மஜீத் எழுதினார். அதன் முடிவுகள் வெளியாகி, அதிகாரப்பூர்வ ரேங்க் பட்டியலிலும் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது. இந்த ரேங்க் பட்டியலின் ஆயுட்காலம் கடந்த 2008-ஆம் ஆண்டோடு காலாவதியானது. ரேங்க் பட்டியலில் பெயர் வந்தும், அரசுத் துறையிலிருந்து எவ்வித அழைப்பும் வராததால் பல ஆண்டுகள் காத்திருந்த மஜீத், ஒருகட்டத்தில் தனக்கு வேலை கிடைக்காது என்பதை உணர்ந்து அந்த ஆசையையே கைவிட்டார். அவருக்கு 60 வயது கடந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகாலமாக தான் மறந்தே போன அந்தத் தேர்வுக்கான 'வேலை நியமனக் கடிதம் தற்போது பிஎஸ்சி அலுவலகத்தில் இருந்து அவரது வீட்டுக் கதவைத் தட்டியுள்ளது.
குமுறல்
ஓய்வுபெறும் வயதில் வந்த வேலை: மஜீதின் குமுறல்
இந்த அதிர்ச்சியூட்டும் தாமதம் குறித்துப் பேசிய அப்துல் மஜீத், "அந்த குறிப்பிட்ட பணியிடம் கடந்த 18 ஆண்டுகளாக நிரப்பப்படாமலேயே இருந்துள்ளது. இந்த மிக நீண்ட காலத் தாமதம் என்னுடைய ஒட்டுமொத்த வேலைவாய்ப்பையும், வாழ்க்கையையும் பாழாக்கிவிட்டது". "தற்போது எனக்கு 61 வயதாகிவிட்டது, அதாவது அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெறும் வயதைக் கடந்துவிட்டேன். இனிமேல் நான் இந்த வேலையில் சேருவதற்கு எந்தவொரு சட்டப்பூர்வ சாத்தியக்கூறுகளும் இல்லை" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.