கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - அதிகரிக்கும் கொரோனா பரவல்
இந்தியாவில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசும் மாநில அரசும் எடுத்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் ஒரே நாளில் 210 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் கொரோனா கட்டுப்படுத்துதல் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் மருத்துவமனைகளில் அதிக படுக்கைவசதிகள், ஐசியூ மற்றும் வெண்டிலேட்டர் அமைப்புகள் போதியளவில் வைத்திருக்கவும் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, பரிசோதனைக்கருவிகள் மற்றும் மருந்துகள் இருப்பதையும் உறுதிசெய்துகொள்ளுமாறு கேரள மருத்துவ சேவை கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.