
TVK பேரணி கரூர் கூட்ட நெரிசல்: நீதிமன்றத்தில் TVK சார்பாக எழுப்பப்பட்ட கேள்விகள் என்ன?
செய்தி முன்னோட்டம்
கடந்த சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக (தமிழக வெற்றி கழகம்) பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ள நிலையில், அக்கட்சியின் சார்பில் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளனர். இந்த வழக்கு அக்டோபர் 3 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என கூறப்பட்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மௌனம் கலைத்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அண்ணன், தம்பி, மகனாக இருந்து அவர்களது கனவுகளைச் சுமப்பேன் என்று அவர் உறுதியளித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனது ஆழ்ந்த துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்… இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது.
— Aadhav Arjuna (@AadhavArjuna) September 28, 2025
மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன்.
ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக…
மனு
மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்
TVK சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கரூர் கூட்ட நெரிசல் ஒரு சாதாரண விபத்து அல்ல; இது திட்டமிட்ட சதிச்செயல் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இதில் ஆளும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜிக்கு நேரடித் தொடர்பு உள்ளது என்றும், விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் இதற்கு முன் நடத்திய அனைத்து கூட்டங்களும் அமைதியாக நடந்த நிலையில், கரூரில் மட்டும் இத்தகைய துயரச் சம்பவம் நிகழ்ந்திருப்பது, இதில் ஏதோ பின்னணி சதித்திட்டம் அடங்கி இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோரிக்கை
சிபிஐ விசாரணை மற்றும் விஜய்க்கு அனுமதி கோரிக்கை
இந்தச் சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, மனுவில் பின்வரும் முக்கியக் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன: இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்க வேண்டும். சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க, தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றும், அதற்குக் காவல்துறை எந்தத் தடையும் விதிக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகங்கள்
தவெக வழக்கறிஞர் எழுப்பிய சந்தேகங்கள்
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக வழக்கறிஞர் அறிவழகன், விபத்து தொடர்பான நிர்வாக மற்றும் மருத்துவ நடைமுறைகளில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்: உடற்கூறு ஆய்வில் அவசரம்: உயிரிழந்தவர்களின் உடல்களை அவசர அவசரமாக உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்? ஒரே நாளில் அனைவரையும் உடற்கூறாய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? விதிமீறல்: சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உடற்கூறாய்வு செய்யக்கூடாது என்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? உயிரிழந்தவர்களுக்குத் தகுதியான மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தார்களா? ஆம்புலன்ஸ் குறித்து சந்தேகம்:விஜய் பிரச்சாரம் செய்த இடத்திற்கு அதிக அளவில் ஆம்புலன்ஸ் வந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. காவலர் எண்ணிக்கை பொய்:விஜய் பிரச்சாரம் செய்த இடத்தில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள் என்று காவல்துறையினர் சொல்வது அப்பட்டமான பொய் என்றும் அவர் கூறியுள்ளார்.