நடிகர் விஜய்க்கு மீண்டும் சிபிஐ பிடி! கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கரூர் மாநாட்டு நெரிசல் விபத்து தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ ஏற்கனவே விஜயை இரண்டு முறை நேரில் அழைத்து விசாரணை நடத்தியுள்ளது. ஜனவரி 12 மற்றும் ஜனவரி 19 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணை நடைபெற்றது. கடந்த இரண்டு விசாரணைகளின் போது சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், சில கூடுதல் விளக்கங்களைப் பெற வேண்டி இருப்பதால், நாளை (மார்ச் 10) விஜய்க்கு தற்போது புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பின்னணி
வழக்கின் பின்னணி: என்ன நடந்தது?
செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடந்த விஜயின் அரசியல் மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கைத் தொடக்கத்தில் மாநில சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்தது. ஆனால், விசாரணை பாரபட்சமின்றி நடக்க வேண்டும் என்பதற்காக, உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு இந்த விசாரணையை நேரடியாகக் கண்காணித்து வருகிறது.
நீதிமன்றம்
நீதிமன்றத்தின் கருத்து
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு, "இந்த விபத்து நாட்டின் குடிமக்களின் மனதில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதும், குற்றவியல் நீதி அமைப்பின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதும் அவசியம்." என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.