LOADING...
கரூர் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு; எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமாவால் தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்?
தமிழகத்தில் தற்பொழுது காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது

கரூர் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு; எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமாவால் தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 30, 2026
09:50 am

செய்தி முன்னோட்டம்

அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கரூர் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜயபாஸ்கர் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரிடம் நேரில் வழங்கியிருந்தார். விதிகளுக்கு உட்பட்டு இந்த ராஜினாமா சமர்ப்பிக்கப்பட்டதை உறுதி செய்த பேரவைத் தலைவர், அதனை உடனடியாக ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் தமிழகத்தில் தற்பொழுது காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

அதிருப்தி

மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தி?

2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட உள்கட்சிப் பூசல்களால் அதிமுகவில் தொடர் அதிருப்தி நிலவி வருகிறது. சில நாட்களுக்கு முன்புதான் எம்.ஆர்.விஜயபாஸ்கரை அதிமுகவின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராகக் கட்சித் தலைமை நியமித்திருந்தது. இருப்பினும், அவருக்குக் கரூர் மாவட்டச் செயலாளர் பதவி மீண்டும் வழங்கப்படாததால் அவர் கடுமையான அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அதிருப்தியின் உச்சமாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளும்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்பொழுது எம்.ஆர்.விஜயபாஸ்கரும் விரைவில் தவெக-வில் இணையலாம் எனப் பேசப்படுகிறது.

இடைத்தேர்தல்

சரிந்தது அதிமுக பலம்; 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்?

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ராஜினாமாவை தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 41 ஆக குறைந்துள்ளது. கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் மொத்தம் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் தற்பொழுது அதிகாரப்பூர்வமாகக் காலியாக உள்ளன. விதிகளின்படி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், இந்த 7 தொகுதிகளுக்கும் வரும் மாதங்களில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை நடத்த அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement