Loading...
கர்நாடகா வாக்காளர் பட்டியல் வெளியீடு: SIR மூலம் 1 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கம்
கர்நாடகாவில் SIR மூலம் 1 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கம்

கர்நாடகா வாக்காளர் பட்டியல் வெளியீடு: SIR மூலம் 1 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 27, 2026
06:15 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட்ட SIR நடவடிக்கைக்கு பிறகு, அம்மாநிலத் தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, முந்தைய பட்டியலிலிருந்த 1.08 கோடிக்கும் அதிகமான(1,08,76,625) வாக்காளர்களின் படிவங்கள் நிராகரிக்கப்பட்டு, அவர்கள் இறுதிப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 30-ஆம் தேதி கர்நாடகாவில் 2002-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இந்த SIR பணிகள் தொடங்கப்பட்டன. திருத்தப் பணிகளுக்கு முன் 5,54,32,314 ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, தற்போது 4,54,55,689(4.54 கோடி) ஆகக் குறைந்துள்ளது. இந்த இறுதிப் பட்டியலில் 2,25,40,493 ஆண் வாக்காளர்களும், 2,29,12,355 பெண் வாக்காளர்களும், 2,841 மூன்றாம் பாலினத்தவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 18-19 வயதுக்குட்பட்ட புதிய வாக்காளர்கள் 6.83 லட்சத்துக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளனர்.

காரணங்கள்

1 கோடி பெயர்கள் நீக்கத்திற்கான பிரதான காரணங்கள்

வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவிலான பெயர்கள் நீக்கப்பட்டதற்கான பிரதான பிரிவுகளைத் தேர்தல் ஆணையம் பகுப்பாய்வு செய்துள்ளது.

அதிகபட்சமாக 65,45,679 வாக்காளர்கள் (11.81%) நிரந்தரமாக வேறிடத்திற்கு இடம்பெயர்ந்த காரணத்தினால் நீக்கப்பட்டுள்ளனர்.

19,00,926 வாக்காளர்கள் முகவரியில் இல்லாதவர்கள் எனவும், 16,39,864 வாக்காளர்கள் உயிரிழந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

பிற இடங்களில் ஏற்கெனவே பதிவிட்ட அல்லது இரட்டைப் பதிவுகளாக இருந்த 7,09,870 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

நோட்டீஸ்

நோட்டீஸ் மற்றும் விசாரணை நடைமுறைகள்

விசாரணை மற்றும் சரிபார்ப்பு தேவைப்பட்ட 43,82,824 வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு நேரில் விசாரணைகள் நடத்தப்பட்டன.

இந்த விசாரணை நடைமுறைகளின் முடிவில், 61,867 வாக்காளர்கள் தகுதியற்றவர்கள் என உறுதி செய்யப்பட்டு இறுதிப் பட்டியலிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

அதேவேளையில், ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23 வரை நடைபெற்ற உரிமைகோரல் மற்றும் ஆட்சேபனைக் காலத்தில் படிவம் 6 மற்றும் படிவம் 8 மூலம் 10.08 லட்சத்திற்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT