ராமநகரா மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு என மாற்ற உள்ளது கர்நாடக அரசு
ராமநகரா மாவட்டத்தை பெங்களூரு தெற்கு மாவட்டமாக மாற்றும் யோசனைக்கு கர்நாடக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ராமநகரா மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து இந்த முடிவை எடுத்ததாக அரசு தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல், "மக்களின் விருப்பப்படி ராமநகரா மாவட்டத்தை பெங்களூரு தெற்கு என பெயர் மாற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெங்களூரு என்ற பிராண்டை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது." என்று தெரிவித்துள்ளார். பெயர் மாற்றம் குறித்து வருவாய்த் துறை விரைவில் அறிவிக்கும் என்று கூறிய அவர், தாலுகாக்களில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று தெளிவுபடுத்தி உள்ளார்.
"ரியல் எஸ்டேட் விலையை உயர்த்த முயற்சி": எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கடந்த ஆண்டு அக்டோபரில் ராமநகரா மாவட்டத்தை பெங்களூரு தெற்கு என்று பெயர் மாற்ற முன்மொழிந்தார். ஆனால், எதிர்கட்சிகளான ஜேடிஎஸ் மற்றும் பாஜக, இது ராமநகராவில் ரியல் எஸ்டேட் விலையை உயர்த்துவதற்கான நோக்கம் என்றும், இதுபோன்ற நடவடிக்கைகள் வளர்ச்சியைக் கொண்டுவராது என்றும் கூறியுள்ளன. "பெங்களூரு நகருக்கு அருகில் உள்ள ராமநகரா, மாகடி, கனகபுரா, சன்னபட்னா மற்றும் ஹரோஹள்ளி தாலுகாக்களுக்கு பெங்களூருவின் நற்பெயரைப் பரப்ப நாங்கள் உத்தேசித்துள்ளோம். ராமநகரா மாவட்டத்தை பெங்களூரு தெற்கு மாவட்டமாக மாற்றவும், ராமநகரா நகரத்தை புதிய மாவட்டத்தின் தலைமையகமாக மாற்றவும் நாங்கள் முன்மொழிகிறோம்." என்று டி.கே.சிவகுமார் முன்பு முன்மொழிந்திருந்தார்.