LOADING...
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக வலைதள தடை விதித்த முதல் மாநிலம்: கர்நாடகா அரசு அதிரடி
சமூக வலைதள தடை விதித்த முதல் மாநிலம் கர்நாடகா

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக வலைதள தடை விதித்த முதல் மாநிலம்: கர்நாடகா அரசு அதிரடி

எழுதியவர் Venkatalakshmi V
Mar 06, 2026
01:20 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் சித்தராமையா இன்று அறிவித்துள்ளார். மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றியபோது இந்த முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். சிறுவர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாடு மற்றும் சமூக வலைதள மோகம் அவர்களின் கல்வி, நடத்தை மற்றும் மனநலனைப் பெருமளவில் பாதிப்பதாக முதலமைச்சர் கவலை தெரிவித்தார். குறிப்பாக, போதைப்பொருள் பழக்கம் மற்றும் தேவையற்ற இணைய தொடர்புகளுக்கு சமூக வலைதளங்கள் ஒரு நுழைவு வாயிலாக அமைவதைத் தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

முன்னோடி

இந்தியாவில் முன்னோடி மாநிலம்

இந்தியாவிலேயே 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக வலைதளத் தடை விதிக்கும் முதல் மாநிலமாக கர்நாடகா உருவெடுத்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இத்தகைய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்த நிலையில், இந்தியாவின் தொழில்நுட்ப மையமாகக் கருதப்படும் பெங்களூருவை தலைநகராக கொண்ட கர்நாடகா இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. ஆந்திரா மற்றும் கோவா போன்ற மாநிலங்கள் இத்திட்டத்தை பரிசீலித்து வந்தாலும், கர்நாடகா இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கருத்து

கல்வியாளர்களின் கருத்து

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாக, அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் முதலமைச்சர் விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிகப்படியான 'ஸ்கிரீன் டைம்' மாணவர்களின் கல்வித் திறனைப் பாதிப்பதோடு, அவர்களைத் தவறான பாதையில் வழிநடத்துவதாக கல்வியாளர்கள் தரப்பிலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஏற்கனவே மொபைல் பயன்பாட்டிற்கு பல கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், இனி சமூக வலைதள அணுகல் சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தப்பட உள்ளது.

Advertisement