காவிரி விவகாரம் - கர்நாடக அரசு மேல்முறையீடு மனு தாக்கல்
தமிழகத்திற்கு உரிய காவிரி நதி நீரை திறந்துவிட கர்நாடகா அரசு மறுத்ததால் காவிரி மேலாண்மை, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. இதனையடுத்து வினாடிக்கு 5000 கன அடி நீர் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று கூறி காவிரி மேலாண்மை உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரி மனுதாக்கல் செய்தது. அதன்படி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை உடனே அமல்படுத்துமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் கலவரம் வெடிக்க துவங்கியது. இதனிடையே, கடந்த 3 தினங்களுக்கு முன்பு காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது.
டெல்லியில் நேற்று நடந்த காவிரி மேலாண்மை கூட்டம்
அதன்படி,செப்.,28 முதல் அடுத்த 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இது மேலும் கர்நாடகாவின் நிலைமையை மோசமடைய செய்தது. இத்தகைய சூழலில் நேற்று(செப்.,29)டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. அதில் காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைப்படி வரும் அக்டோபர்.,15ம்தேதி வரை 3,000 கன அடி காவிரி நீரினை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், தற்போது கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் தமிழகத்திற்கு 3,000 கனஅடி நீரினை திறந்துவிடுமாறு பிறப்பித்த உத்தரவை மறு சீராய்வு செய்யக்கோரி வலியுறுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.