கார்கில் நினைவு தினம் - திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்
தமிழ்நாடு மாநிலம் முழுவதுமுள்ள 5 மண்டலங்களில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் இன்று(ஜூலை.,26)திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் மேடை அமைக்கப்பட்டு இந்த பயிற்சி கூட்டமானது துவங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் தஞ்சை வடக்கு, திருச்சி தெற்கு, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 15 மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் இந்த குறிப்பிட்ட மாவட்டங்களுக்குட்பட்ட திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர். இந்நிலையில், இந்த பயிற்சி கூட்டத்தினை துவக்கி வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று கார்கில் போர் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
50 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு
இதனையொட்டி திருச்சி மையப்பகுதியிலுள்ள மேஜர் சரவணன் நினைவிடத்திற்கு சென்ற முதல்வர், அவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன்பின்னர் அவர் நட்சத்திர ஓட்டலில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தப்பிறகு மாலை நடக்கவுள்ள பாசறை கூட்டத்தில் கலந்துகொள்வார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இந்நிலையில், இன்று காலை முதலே இந்த பாசறைக்கூட்டத்திற்கு 15 மாவட்டங்களிலிருந்தும் வருகைத்தரும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் முதல்வர் படமுள்ள டி.ஷர்ட், மஞ்சப்பையில் திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் குறித்த புத்தகம், க்யூ-ஆர் கோடு கொண்ட விண்ணப்பங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறதாம். தொடர்ந்து, நாளை(ஜூலை.,27)காலை முதல் அடுத்த 3 நாட்களுக்கு திருச்சியில் வேளாண்துறை சார்பில் நடத்தப்படவுள்ள கண்காட்சியினை முதல்வர் துவக்கிவைக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் 50 விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பினை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.