ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்களை மிஞ்சும் கம்பம் 'ரீச்' உணவு டெலிவரி நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
உணவு பொருட்களை டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சோமேட்டோ நிறுவனங்கள் மற்றும் மளிகை உள்ளிட்ட இதர பொருட்களை டெலிவரி செய்யும் டன்ஸோ, செப்டோ போன்ற நிறுவனங்களை மிஞ்சும் வகையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 'ரீச்' என்னும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
உள்ளூரில் மட்டும் சேவைகளை வழங்கும் இந்த டெலிவரி நிறுவனத்தினை கம்பம் நகரை சேர்ந்த விஜயகாந்த் என்பவர் நடத்தி வருகிறார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
கொரோனா லாக்டவுன் காலங்களில் மக்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி கொண்டு அவர்களிடம் சேர்த்த இவர், தற்போது 10க்கும் மேற்பட்டோரை பணிக்கு வைத்து இத்தொழிலினை விரிவாக்கம் செய்துள்ளார்.
உள்ளூரில் உணவு மற்றும் மாளிகைப்பொருட்கள் டெலிவரி சேவை மட்டுமல்லாமல் இந்நிறுவனம் மற்ற சேவைகளையும் செய்கிறது என்று கூறப்படுகிறது.
டெலிவரி
'போராளி' படத்தினை பின்பற்றி துவங்கிய டெலிவரி சேவை
அதன்படி, இந்நிறுவனம் டீக்கடைகளில் இருந்து டீ-காபி, பூக்கடையில் இருந்து பூக்கள், மருந்து-மாத்திரைகள், பால் பாக்கெட், பழங்கள், காய்கறிகள் என எதுவேண்டுமானாலும் ஒரு கால் செய்வதன் மூலம் ரீச் ஊழியர்கள் கொண்டுவந்து வீட்டிலேயே டெலிவரி செய்துவிடுகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
பாதி வழியில் பெட்ரோல் இல்லாமல் வண்டி நின்று விட்டால் கூட, இவர்களுக்கு ஒரு போன் செய்தால் பெட்ரோலினை வாங்கி கொண்டுவந்து தந்து விடுகிறார்களாம்.
இந்த சேவைகளுக்கு மக்கள் முன்னதாக கூட பணம் செலுத்த வேண்டாமாம்.
பொருட்களை பெற்றப்பின்னரே பணத்தினை செலுத்தலாம்.
இச்சேவைகளுக்கு அவர்கள் 40 ரூபாயினை கட்டணமாக வசூலிக்கிறார்கள்.
இந்த முறைகள் அத்தனையும் சசிகுமாரின் 'போராளி'படத்தில் வருபவைத்தான்.
அதனை பின்பற்றியே விஜயகாந்த் தற்போது தனது இந்த டெலிவரித்தொழிலினை செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.