ஏன் MNM-க்கு இன்னும் நிரந்தர சின்னம் கிடைக்கவில்லை? தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் ஒரு பார்வை
செய்தி முன்னோட்டம்
இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னமும், மக்கள் நீதி மய்யம் (MNM) கட்சிக்கு 'பேட்டரி டார்ச்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ஆனால், இது ஒரு 'நிரந்தரச் சின்னம்' அல்ல, மாறாக ஒரு 'பொது சின்னம்' (Common Symbol) ஆகும். ஒரு கட்சி தேர்தல் ஆணையத்தால் 'அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி' என்ற தகுதியை பெறாதவரை, அதற்கு நிரந்தரச் சின்னம் வழங்கப்படாது என்பதே இதற்கு காரணம். மக்கள் நீதி மய்யம் பலமுறை தேர்தலை சந்தித்திருந்தும் அது அங்கீகரிக்கப்படவில்லையா என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். அதற்கான விளக்கம் தான் இந்த கட்டுரை. தேர்தல் ஆணையத்தின் விதிகளும், நிரந்தர சின்னம் பெற யாருக்கு உரிமை உண்டு என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
விதிகள்
பொது சின்னம் மற்றும் முன்னுரிமை விதிகள்
தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, அங்கீகரிக்கப்படாத கட்சிகள் ஒவ்வொரு தேர்தலின் போதும் 'பொது சின்னங்கள்' பட்டியலில் இருந்தே சின்னத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இருப்பினும், ஒரு கட்சி கடந்த தேர்தலில் பயன்படுத்திய அதே சின்னத்தை மீண்டும் கோரினால், அதற்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த அடிப்படையில் தான் கமல்ஹாசனின் MNM கட்சிக்கு மீண்டும் 'பேட்டரி டார்ச்' கிடைத்துள்ளது.
அங்கீகாரம்
மாநிலக் கட்சி அங்கீகாரத்தை பெறுவது எப்படி?
ஒரு கட்சி தனது சின்னத்தை நிரந்தரமாக்கிக் கொள்ள வேண்டுமென்றால், தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்: ஒவ்வொரு 25 இடங்களுக்கும் ஒரு மக்களவை இடத்தை அல்லது சட்டமன்ற இடங்களில் 3% இடத்தை வெல்வது அல்லது பதிவான 6% வாக்குகளுடன் ஒரு மக்களவை அல்லது இரண்டு சட்டமன்ற இடங்களை வெல்வது அல்லது பொதுத் தேர்தலில் பதிவான 8% வாக்குகளைப் பெறுவது. மக்கள் நீதி மய்யம் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 3.7% வாக்குகளையும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 2.5% வாக்குகளையும் மட்டுமே பெற்றது. எவ்விடத்திலும் வெற்றி பெறாததாலும், நிர்ணயிக்கப்பட்ட வாக்கு சதவீதத்தை எட்டாததாலும் அக்கட்சி இன்னும் 'பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி' என்ற நிலையிலேயே உள்ளது.