காலஷேத்ரா கல்லூரி விவகாரம்: குற்றம்சாட்டப்பட்ட 4 ஆசிரியர்களும் டிஸ்மிஸ்
காலஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 ஆசிரியர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. மாணவிகள் குற்றம்சாட்டிய பேராசிரியர்கள் ஹரிபத்மன், சாய் கிருஷ்ணா, ஸ்ரீநாத், சஞ்சித் லால், ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், மாணவிகள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் காலஷேத்ரா கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை காலஷேத்ரா கல்லூரியில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இதனையடுத்து, பாலியல் தொல்லை தந்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் கடந்த மார்ச் 30-31ஆம் தேதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றம்சாட்டப்பட்ட ஹரிபத்மனின் வாக்குமூலம்
அதன் பின், இது குறித்து, தேசிய மகளிர் ஆணைய தலைவர் நேரில் விசாரணை நடத்தினார். குற்றம்சாட்டப்பட்ட 4 பேராசிரியர்களில் ஒருவரான ஹரிபத்மனை இன்று காலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிறகு வாக்குமூலம் கொடுத்த ஹரிபத்மன், தன் மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். மாணவிகளிடம், தான் சகஜகமாக பழகியதாகவும் குற்றசாட்டுகள் எல்லாம் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த விசாரணைக்கு பின், இன்று மாலை ஹரிபத்மனை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். இதற்கிடையில், குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் டிஸ்மிஸ் செய்து காலஷேத்ரா கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.