கலாஷேத்ரா விவகாரம் - 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம்
செய்தி முன்னோட்டம்
சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது.
இதனையடுத்து பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில மகளிர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.
தொடர்ந்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே கடந்த 2 வாரத்தில் இந்த பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார்கள் குறித்து சென்னை அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கலாஷேத்ரா
விசாரணைக்கு வருமாறு மாணவிகளுக்கு சம்மன்
அதன்படி இந்த விவகாரம் குறித்து பேசிய மாணவிகள், நாங்கள் எவ்வித பாலியல் பாதிப்புகளுக்கும் உள்ளாகவில்லை.
எங்கள் ஆசிரியர்கள் மீது மிகுந்த அன்பும், அளவுகடந்த மரியாதையும் எங்களுக்கு உள்ளது என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதில் மேலும் சில மாணவிகள், எங்களுக்கும் இந்த புகார்களுக்குமே எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் 162 மாணவிகளிடம் விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு பரிந்துரை செய்திருந்தனர்.
அந்த பரிந்துரையின் அடிப்படையில், அடையார் மகளிர் காவல் நிலையத்திலிருந்து குறிப்பிட்ட அந்த 162 மாணவிகளுக்கு விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.