
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க, ஜூன் மாதம் சிறப்பு முகாம்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசின் முக்கிய சமூக நலத்திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெயர் விடுபட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த தகவலை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் இன்று அறிவித்தார்.
முதல்வர் தனது உரையில், "தகுதி பெற்றிருந்தாலும் பலர் திட்டத்தில் பெயர் சேர்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வந்தது. இது குறித்து அரசு கவனத்தில் எடுத்துள்ளது. ஆகவே, ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கும் வசதி மீண்டும் தொடங்கப்படும். தகுதி உள்ள அனைவருக்கும் மாதம் ₹1,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
முகாம்
9,000 இடங்களில் முகாம்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 4-ஆம் கட்ட முகாம்கள் ஜூன் மாதத்தில் 9,000 இடங்களில் நடைபெறவுள்ளன.
இந்த முகாம்கள் மூலம் புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதுடன், ஏற்கனவே விண்ணப்பித்தும் தவறுதலாக நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் திருத்த வாய்ப்பு வழங்கப்படும்.
தற்போது வரை இந்தத் திட்டத்தின் கீழ் 1.14 கோடி பெண்களுக்கு ₹1,000 மாதம் வழங்கப்பட்டு வருகிறது.
இது, குடும்ப நலன் மேம்பாடு மற்றும் பெண்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த அறிவிப்பு மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தவறுதலால் வாய்ப்பிழந்த பலர் தற்போது மீண்டும் இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக இணைவதற்கான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.