பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை துவக்கம்
இந்தாண்டின் அமர்நாத் புனித யாத்திரை பகவதி நகர் முகாமிலிருந்து இன்று துவங்கியது. முதல் குழுவை, ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து துவக்கி வைத்தார். இன்று புறப்பட்ட முதல் குழுவில் 3400 பக்தர்கள் புறப்படுகிறார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குழு ஜம்மு காஷ்மீர் மாகாணத்தில் உள்ள பேஸ் காம்பிலிருந்து, பஹல்கம் மற்றும் பல்தாளுக்கு புறப்படுகிறது. அங்கிருந்து மலைப்பாதை மீதான யாத்திரை துவங்கும். வழி எங்கும் யாத்ரிகர்களின் பாதுகாப்பிற்காக CRPF வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அமர்நாத் யாத்திரை நிர்வாகத்தினரும், ஜம்மு காஷ்மீர் அரசும் தெரிவித்துள்ளது.
பலத்த ராணுவ பாதுகாப்பு:
பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, துணை ராணுவத்தினர் மட்டுமின்றி, வெடிகுண்டு நிபுணர்கள் குழுக்களும், மோப்பநாய்களும் உடனிருப்பர். 24 மணிநேரமும் இந்த குழுக்கள் கண்காணிப்பு பணியில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, டரோன்களும், ஆகாய மார்க்கமான பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 62 நாட்கள் நடைபெறும் இந்த அமர்நாத் யாத்திரை, நாளை, ஜூலை 1 தொடங்கி, ஆகஸ்ட் 31 அன்று நிறைவடையும். யாத்திரைக்கு வரும் பக்தர்கள், சமையல் செய்ய, உபகரணங்கள், பொருட்கள் மற்றும் தங்கும் கூடாரங்களை 'லாங்கர்' குழுக்கள் ஏற்பாடு செய்துள்ளன. இந்தாண்டு, 22 லாங்கர் குழுக்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.