Page Loader
1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்!
1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஜியோமார்ட், மேலும் 9000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டம்

1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்!

எழுதியவர் Prasanna Venkatesh
May 23, 2023
02:08 pm

செய்தி முன்னோட்டம்

ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த இணைய வணிக நிறுவனமான ஜியோமார்ட், இந்தியாவில் 1000 ஊழியர்களை தற்போது பணிநீக்கம் செய்திருக்கிறது. இனி வரும் நாட்களில் மேலும் 9,000 ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே அந்நிறுவனம் தங்களின் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை ராஜினாமா செய்ய அறிவுறுத்தியதாக அந்நிறுவன ஊழியர்கள் சிலர் தெரிவித்திருக்கின்றனர். வணிகர்களுக்கு மிகக் குறைந்த விலையில் பொருட்களை வழங்கி, விநியோகஸ்தர்களிடையே கடந்த ஆண்டு கலக்கத்தை ஏற்படுத்தியது ஜியோமார்ட். தற்போது தங்களின் வருவாயைப் பெருக்கவும், லாபத்தை உயர்த்தவும், செலவுகளைக் குறைக்கவும் இந்தப் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது அந்நிறுவனம். மேலும், இந்தியாவில் இயங்கிவரும் அந்நிறுவனத்தின் 150 ஃபுல்பில்மெண்ட் மையங்களில் பாதிக்கும் மேற்பட்ட மையங்களை மூடவும் அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

ஜியோமார்ட்

ஜியோமார்ட்டின் திட்டம் என்ன? 

ஜெர்மனியைச் சேர்ந்த சில்லரை வணிக நிறுவனமான மெட்ரோ AG நிறுவனத்தின் இந்திய வணிகத்தை ரூ.2,850 கோடியில் கைப்பற்றியிருக்கிறது ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம். இதனைக் கடந்த வாரம் அந்த ஜெர்மன் நிறுவனமும் உறுதி செய்திருக்கிறது. இந்த புதிய கைப்பற்றலைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் 3,500 ஊழியர்களும் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் வசம் வந்திருக்கின்றனர். ஜியோமார்ட்டின் பணிநீக்க முடிவுகளுக்கு இந்தப் புதிய ஒப்பந்தமும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இணைய சில்லறை வணிகச் சந்தையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு வெற்றிகரமான நிறுவனமாக திகழ தங்களுடைய வணிகயுக்தியை மாற்றியிருக்கிறது ஜியோமார்ட். அந்த யுக்தியின் ஒரு பகுதியாகவே மேற்கூறிய நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்து வருவதாகத் தெரிகிறது.