2000 நோட்டு அறிவிப்பு எதிரொலி.. நகைக்கடைகளில் குவியும் மக்கள்?
கடந்த மே 19-ம் தேதி 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது ரிசர்வ் வங்கி. மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை நாளை முதல் செப் 30 வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இந்நிலையில் திடீரென இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து அதிகளவில் 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருக்கும் பலரும் தங்கத்தின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியிருக்கின்றனர். "2000 ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பு வெளியிட்டவுடன் பலரும் தங்கத்தை 2000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து வாங்குவதைக் குறித்து விசாரித்தனர். ஆனால், கடுமையான KYC விதிகள் காரணமாக யாரும் வாங்கவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார் தங்கநகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சாயாம் மெஹ்ரா.
பணமதிப்பிழப்பின் போதும்..
பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான போது அதிகளவில் மக்கள் தங்கத்தை வாங்கிக் குவித்தனர். ஆனால், அதுபோன்ற பதற்றமான சூழ்நிலை தற்போது இல்லை, எனவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டு லட்சத்திற்கு மேல் மதிப்பிற்கு தங்கநகை வாங்குபவர்கள் தங்களுடைய பான் மற்றும் ஆதார் எண்ணை KYC-க்காக (Know Your Customer) சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி 2000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு தங்கநகை வாங்குபவர்களிடம் அன்றைய விலையை விட கூடுதல் விலையில் தங்கம் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது. "இது போன்ற நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தப்படாத இடங்களில் மட்டுமே நடைபெறுகிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட நகைக்கடைகளில் இந்த மாதிரியான சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறுவதில்லை", எனக் கூறியிருக்கிறார் PNG நகைக்கடைகளின் நிர்வாக இயக்குநரான சவுரப் காட்கில்.