பிஸ்லேரி இன்டர்நேஷனலின் புதிய தலைவர்: யாரிந்த ஜெயந்தி சவுகான்
பிஸ்லேரி இன்டர்நேஷனல் நிறுவனத்தை டாடா கன்சூமர் புராடக்ட்ஸ் லிமிடெட்(TCPL) கையகப்படுத்தாது என்றும், பிஸ்லேரியின் நிறுவனர் மற்றும் தலைவர் ரமேஷ் சவுகானின் மகள் ஜெயந்தி சவுகான் மூலம் நிறுவனம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயந்தி சௌஹான், பிஸ்லேரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வரும் இந்திய தொழிலதிபர் ஆவார். "ஜெயந்தி எங்கள் தொழில்முறை குழுவுடன் நிறுவனத்தை நடத்துவார். நாங்கள் நிறுவனத்தை விற்க விரும்பவில்லை." என்று பிஸ்லேரி தலைவர் ரமேஷ் சவுகான் கூறியுள்ளார். தலைமை நிர்வாகி ஏஞ்சலோ ஜார்ஜ் தலைமையிலான தொழில்முறை குழுவுடன் அவர் பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயந்தி சவுகான் ரமேஷ் சவுகானின் ஒரே மகள் ஆவார். ஜெயந்தி சவுகான் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை டெல்லி, மும்பை மற்றும் நியூயார்க்கில் கழித்தார்.
யாரிந்த ஜெயந்தி சவுகான்?
உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, சௌஹான் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் அண்ட் மெர்ச்சண்டைசிங்கில்(FIDM) தயாரிப்பு மேம்பாட்டைப் படித்தார். அதன் பிறகு, அவர் இஸ்டிடுடோ மரங்கோனி மிலானோவில் ஃபேஷன் ஸ்டைலிங்கை கற்றார். லண்டன் காலேஜ் ஆஃப் ஃபேஷன் நிறுவனத்தில் ஃபேஷன் ஸ்டைலிங் மற்றும் போட்டோகிராஃபி ஆகியவற்றிலும் அவர் தகுதி பெற்றுள்ளார். மேலும், அவர் 24 வயதில் தனது தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் பிஸ்லேரியில் பணியாற்ற தொடங்கினார். 2011 வரை டெல்லி அலுவலகத்தில் வேலை செய்த அவர், அதன் பிறகு மும்பை அலுவலகத்தில் தன் பணியை தொடர்ந்தார். HR, சேல்ஸ், தயாரிப்பு மேம்பாடு, விளம்பரம் போன்ற பலதுறைகளிலும் இவர் இதுவரை பணியாற்றி இருக்கிறார்.