
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: உரிமை கோரிய தீபா மற்றும் தீபக் மனு தள்ளுபடி
செய்தி முன்னோட்டம்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களிடமிருந்து சொத்துகுவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள், தங்கம், வெள்ளி, வைரம், மின்சாதன பொருட்கள் போன்ற பொருட்களை ஏலம் விட வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளராக உள்ள நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவானது விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு வழக்கறிஞர் ஒருவரை நீதிமன்றம் நியமனம் செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் சட்டரீதியான வாரிசுகளான தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தனர்.
உரிமை
பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை
இதன் விசாரணை நீதிபதி மோகன் முன்னிலையில் வந்ததையடுத்து, குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை வாரிசுகளிடம் ஒப்படைக்க இயலாது என்று லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் பதிலளிக்கப்பட்டது.
இதனையடுத்து, சொத்துகுவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு வாரிசுதாரர்கள் உரிமை கோர முடியாது என்று கூறிய நீதிபதி, தீபக் மற்றும் தீபா உரிமை கோரி தாக்கல் செய்த மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கினை பதிவு செய்த நிலையில், அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
அந்த சோதனையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், பல கோடி மதிப்புள்ள பல பொருட்களை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.