வெளியுறவு அமைச்சராக பாகிஸ்தானுக்கு முதல் பயணம்; எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க செல்கிறார் அமைச்சர் ஜெய்சங்கர்
அக்டோபர் 15-16 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்குச் செல்வார் என்று வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) தெரிவித்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படும் எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியக் குழுவை ஜெய்சங்கர் வழிநடத்துவார் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்வது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, இந்த மாதம் திட்டமிடப்பட்ட எஸ்சிஓ கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு அனுப்பியதை ஆகஸ்ட் மாதம் அமைச்சகம் உறுதி செய்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்தது.
எஸ்சிஓ அமைப்பின் தலைவரான உள்ள பாகிஸ்தான்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) அரசாங்கத் தலைவர்கள் கவுன்சிலின் சுழற்சித் தலைவராக பாகிஸ்தான் தற்போது உள்ளது. அதையொட்டி, அக்டோபரில் இரண்டு நாள் எஸ்சிஓ அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தை நடத்தவுள்ளது. பாகிஸ்தானில் எஸ்சிஓ நிகழ்வுக்கு முன்னதாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் நிதி, பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சாரம் தொடர்பான பல்வேறு கூட்டங்கள் நடைபெற உள்ளன. முன்னதாக கடந்த ஜூலை 3-4 தேதிகளில் கஜகஸ்தானில் நடந்த எஸ்சிஓ உச்சி மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணித்துவிட்டு, ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்து கொண்ட அந்த கூட்டத்திலும், இந்திய குழு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.