Page Loader
'ட்ரெயின்மேன்' தளத்தை கையகப்படுத்தியதன் மூலம் IRCTC-க்கு போட்டியாக வருகிறதா அதானி?
iRCTC-க்கு போட்டியாக வருகிறதா அதானி குழுமம்?

'ட்ரெயின்மேன்' தளத்தை கையகப்படுத்தியதன் மூலம் IRCTC-க்கு போட்டியாக வருகிறதா அதானி?

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 19, 2023
01:57 pm

செய்தி முன்னோட்டம்

அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி டிஜிட்டல் லேப்ஸ் நிறுவனமானது ரயில் முன்பதிவு மற்றும் தகவல் தளமான ட்ரெயின்மேனை கடந்த வாரம் கையகப்படுத்தியிருக்கிறது. பயணங்களுக்கான முன்பதிவு தொடர்பான சேவைகளை வழங்கிவரும் நிறுவனங்களில் முதலீடு செய்வது அதானி குழுமத்திற்கு இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டே, விமானப் பயணங்களுக்கான டிக்கெட்டுக்கள் மற்றும் கேப்களை முன்பதிவு செய்வதற்கான அதானி ஒன் சேவையை அறிமுகப்படுத்தியது அக்குழுமம். அதன்பின், ஃப்ளிப்கார்டின் கிளியர்ட்ரிப் நிறுவனத்திலும் குறிப்பிட்ட பங்குகளை வாங்கியது அதானி குழுமம். அதனைத் தொடர்ந்து தற்போது ட்ரெயின்மேன் தளத்தை கையக்கப்படுத்தியிருக்கிறது. 2016-ல் தொடங்கப்பட்ட ட்ரெயின்மேன் தளமானது இதற்கு முன்னர் ரூ.80 கோடியில் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது எவ்வளவு மதிப்பிற்கு அதானி குழுமம் அதனை கையகப்படுத்தியிருக்கிறது என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.

அதானி

ட்ரெயின்மேனின் மூலம் IRCTC-க்குப் போட்டியாக வருகிறதா அதானி: 

IRCTC-யின் தகவல் தளத்திற்கான அனுமதியை பேடிஎம், மேக் கை ட்ரிப் மற்றும் ட்ரெயின்மேன் உள்ளிட்ட பிற வாடிக்கையாளர் சேவை நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கிறது IRCTC. மேற்கூறிய தகவல்களைப் பயன்படுத்தி ரயில் பயணத்திற்கான முன்பதிவுகளை பயணிகள் மேற்கொள்ள முடியும். ஆனால், அதற்கு IRCTC-யின் அனுமதி அந்நிறுவனங்களுக்குத் தேவை. IRCTC-யின் அனுமதி இல்லாமல் ரயில் முன்பதிவு சேவைகளை அந்நிறுவனங்களால் வழங்க முடியாது. எனவே, ட்ரெயின்மேனை கையக்கப்படுத்துவதன் மூலம் அதானி குழுமத்தால் IRCTC-யுடன் போட்டியிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கையகப்படுத்தல் IRCTC-யை எந்த விதத்திலும் பாதிக்காது. தற்போது IRCTC-யின் மொத்த முன்பதிவில் வெறும் 0.13% மட்டுமே ட்ரெயின்மேன் தளத்தின் மூலம் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.