ஈரான் போர் எதிரொலி: அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பாவிற்கான ஏர் இந்தியா விமானச் சேவைகள் நிறுத்தம்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கான தனது அனைத்து விமான சேவைகளையும் மார்ச் 2 நள்ளிரவு வரை ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளதால், சர்வதேச விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய மற்றும் வரவேண்டிய சுமார் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் விமான நிலையத்திலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மும்பையில் சுமார் 125 விமானங்களும், திருச்சியிலிருந்து மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மொத்தம் 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஐரோப்பா
ஐரோப்பா செல்லும் விமானங்கள் மாற்று பாதையில் இயக்கம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மட்டும் சுமார் 110-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. மேலும், ஐரோப்பா செல்லும் சில விமானங்களும் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால் காலதாமதம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயை சேர்ந்த 'எமிரேட்ஸ்' நிறுவனமும் மார்ச் 2-ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை தனது சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி இந்த வான்வெளி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்படும் முன், தங்களின் விமானச் சேவை குறித்த தற்போதைய ஸ்டேட்டஸை இணையதளம் அல்லது அந்தந்த நிறுவனங்களின் செயலிகள் மூலம் சரிபார்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.