LOADING...
கடல் வழியில் பயணிக்க ரூ. 16 கோடி கட்டணமா? ஈரானின் அதிரடியும் இந்தியாவின் தெளிவான பதிலடியும்
ஈரான் 2 மில்லியன் டாலர் வரை கட்டணம் வசூலிப்பதாகத் தகவல்

கடல் வழியில் பயணிக்க ரூ. 16 கோடி கட்டணமா? ஈரானின் அதிரடியும் இந்தியாவின் தெளிவான பதிலடியும்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 10, 2026
05:14 pm

செய்தி முன்னோட்டம்

ஹார்முஸ் நீரிணையில் பயணிக்கும் சில கப்பல்களுக்கு ஈரான் 2 மில்லியன் டாலர் வரை கட்டணம் வசூலிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில், சர்வதேச கடல் வழிப்பாதைகளில் "சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை" உறுதி செய்ய வேண்டும் என்ற தனது நிலையான நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக்குழு உறுப்பினர் அலாதீன் போருஜெர்டி இது குறித்துப் பேசுகையில்,"நீரிணையைக் கடக்கும் சில கப்பல்களிடம் இருந்து 2 மில்லியன் டாலர் போக்குவரத்து கட்டணம் வசூலிப்பது ஈரானின் வலிமையைப் பிரதிபலிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் செல்லும் இந்த முக்கிய வழித்தடத்தில் ஈரானின் கட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

பதில்

இந்தியாவின் திட்டவட்டமான பதில்

மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவு குறித்துப் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "ஈரான் மற்றும் இந்தியா இடையே கட்டணம் வசூலிப்பது குறித்து எந்தவொரு விவாதமும் நடைபெறவில்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார். ஈரான் இந்தியாவை ஒரு 'நட்பு நாடாகக்' கருதி முன்னுரிமை அளித்தாலும், அத்தகைய கட்டணம் எதையும் இந்தியா செலுத்தவில்லை என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவின் 90 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் இந்த வழித்தடம் வழியாகவே வருவதால், இதன் பாதுகாப்பு இந்தியாவுக்கு மிக அவசியமானதாகும்.

அமெரிக்கா

சர்வதேச சட்டங்களும் அமெரிக்காவின் நிலைப்பாடும்

ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்டத்தின்படி (UNCLOS), இயற்கையான கடல் வழிப்பாதைகளைக் கடக்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. ஆனால், அமெரிக்காவும் ஈரானும் இந்தச் சட்டத்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தக் கட்டண விவகாரத்தை ஒரு 'கூட்டு முயற்சி' போல கையாளுவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறியுள்ளது குழப்பத்தை அதிகரித்துள்ளது. புதன்கிழமை எட்டப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்தம், ஹார்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பதை ஒரு நிபந்தனையாகக் கொண்டுள்ளது. ஈரான் வெளியுறவுத் அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீரிணை வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்து சாத்தியம் என்றும், ஆனால் அது ஈரானியப் படைகளின் ஒருங்கிணைப்புடன் மட்டுமே நடக்கும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement